Friday, November 19, 2010

உயிருக்கு உரமாகும் உயர்ந்த பிரார்த்தனை! - சுவாமி ஓங்காராநந்தர்

Dear Family / Friends,

Believe it or not...
About our spiritual / devotional prayers... Very nice one.... Received from my good friend & forwarding it to u all...This is FYI.,



உயிருக்கு உரமாகும் உயர்ந்த பிரார்த்தனை!
 

ன்மிகத்தின் முக்கிய அம்சம் பிரார்த்தனை. இதுவே, கடவுளுடன் நம்மை இணைக்கிறது. பொதுவாக, துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காகவே நாம் பிரார்த்திக்கிறோம். துன்பம் நீங்கியதும் கடவுளை மறந்து விடுகிறோம்; மீண்டும் துன்பம் வரும்போது கடவுளிடம் ஓடுகிறோம்!
துன்பம் நீங்க, இறைவனிடம் முறையிடுவதில், உயர்ந்ததொரு மனோதத்துவம் ஒளிந்திருக்கிறது. மனோதத்துவ நிபுணர்களிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை! பலரும், 'மனசு சரியில்ல. அதான் கோயிலுக்கு வந்தேன்' என்று, ஸ்வாமிக்குப் பிரார்த்தனை மாலையை சாற்றி வழிபட்டு, மனசு நிறைய நிம்மதியை நிரப்பிக் கொண்டு திரும்புவர்.

கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத சக்தி ஒன்று இயங்கி வருகிறது என்பதும் மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால், இளைப்பாறுதலும் நிம்மதியும் கிடைக்கும் என்பதும் இறை நம்பிக்கையின் அடித்தளம். 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்று பழமொழியே உண்டு. துன்பத்தால் துவளும்போது, கடவுளைப் பிரார்த்திப்பதால் நம் மனோபலம் கூடுகிறது. ஆமாம்... சூழ்நிலையை எதிர்கொள்ளும் தைரியத்தை வழங்குகிறது பிரார்த்தனை!
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
என்பது பாரதியாரின் பொன்னான வாக்கு.

'துன்பம் நீங்க வழிபடுவோர்,
இன்பம்
அதிகரிக்க வழிபடுவோர்,
பரம்பொருளையே
வாழ்வின் பரம லட்சியமாகக் கொண்டு வழிபடுவோர்,
தனக்கு வேறாகப் பரம்பொருள் இல்லை என்பதை உணர்ந்து வழிபடுவோர் என, என்னுடைய பக்தர்கள் நான்கு விதம்' என்று கீதையில் அருளுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

பெரிதாக துன்பங்கள் எதுவும் இல்லை என்றாலும், அதிக இன்பம், பொருளாதார வெற்றி வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுபவர்களும் இங்கே உண்டு. இறைவன் பேரின்ப வடிவினன்! வைரக் குவியலின் ஊடே கண்ணாடித் துண்டுகளை சேகரிக்கும் முட்டாளைப் போல், பேரின்ப வடிவமான கடவுளிடம், அற்ப சுகத்தையே திரும்பத் திரும்ப கேட்பதுதான் மனித குணம்!

துன்பம் நீங்கவும் இன்பம் அதிகரிக்கவும் வேண்டுவோர், இறைவனை வெறும் கருவியாகவே உபயோகிக்கின்றனர். 'எனக்கு இதைச் செய்தால், உனக்கு இதைச் செய்கிறேன்' எனும் வியாபாரம், கடவுள் வரை நீண்டு விடுகிறது. ஆனால், எத்தனை முறை பிரார்த்தித்தாலும் துன்பத்தின் வடிவம் மாறுகிறதே தவிர, துன்பம் மறையவில்லை; எத்தனை இன்பங்களை அனுபவித்தாலும் இதயத்தின் அடிஆழத்தில் ஓர் வெறுமை இருக்கிறது என்ற பேருண்மை ஒருநாள் விளங்குகிறது. இப்படி, வாழ்க்கைப் பள்ளியில் அனுபவப் பாடங்களைக் கற்ற பிறகு, உண்மைப் பொருளைக் குறித்த ஆராய்ச்சி உள்ளத்தில் துவங்குகிறது. சிந்திக்கத் துவங்குபவனுக்கு வாழ்க்கை மீதான பார்வை மாறுகிறது. அடிக்கடி செய்த நற்செயல்களின் பலனாக, நல்லோர் சேர்க்கையும் கிட்டுகிறது. இந்த நிலையில்தான் உலக வாழ்க்கை மற்றும் கடவுள் குறித்த கேள்விகள் எழுவதும் அவற்றுக்கு விடை காண்பதற்கான முயற்சியும் ஆரம்பமாகிறது.

நல்லோர் சேர்க்கையால், இறைவனின் மகிமையை செவி குளிரக் கேட்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து உயிர்களையும் ஆக்கி அளித்து, துடைத்து, மறைத்து அருளி, நீக்கமற நிற்கும் சமர்த்தனாகிய இறைவனின் பெருமை ஒருவாறு புலப்படுகிறது. கடவுளின் பிரமாண்டத்துக்கு முன்னே நமது அன்றாடப் பிரச்னைகள் கால் தூசி பெறாது என்பது புரியத் துவங்குகிறது.
சுவாமி விவேகானந்தர், நரேந்திரனாக இருந்தபோது நடந்த சம்பவம்... ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, ''எனது குடும்ப வறுமை நீங்க வேண்டும் என்று காளிதேவியிடம் பிரார்த்திக்கக் கூடாதா, நீங்கள்?'' என்று கேட்டாராம். ''நீயே கேள்'' என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர். அதன்படி காளியின் சந்நிதிக்குச் சென்ற விவேகானந்தரின் மனதில், உயர்ந்த பிரார்த்தனைகளே உதித்தனவாம். ஞானம் மற்றும் தெளிவு வேண்டி பிரார்த்தித்தவர், குடும்ப வறுமையை மறந்தே போனார். இதேபோல் இரண்டு முறை நிகழ்ந்தது. மூன்றாவது முறை, குடும்ப வறுமை நினைவில் இருந்தும், அதுகுறித்துப் பிரார்த்திக்கத் தோன்றவில்லை விவேகானந்தருக்கு. 'இந்த அல்பமான விஷயத்தையா இறைவனிடம் கேட்பது?' என்று எண்ணினார்!
கடவுள் தேடலையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்கள், கடவுளுடன் வியாபாரம் பேசுவதில்லை; கடவுளை கருவியாகப் பயன்படுத்தி வெறும் உலக சுகங்களை அனுபவிப்பதில்லை. இறைவனுக்காக எழுந்து, வேலை பார்த்து, தாயினும் சாலப் பரிந்த கடவுளின் கருணையை எண்ணி வியக்கின்றனர். இவர்களின் பிரார்த்தனை எல்லாம், 'கடவுளே! என் உள்ளத்தை தூய்மையாக்கு; அதில் உன்னைப் பற்றிய அறிவொளியை ஏற்று!' என்பதுதான்!

கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்; உள்ளத் தாமரையில் வீற்றிருக்கிறார். 'மலர்மிசை ஏகினான்' என்கிறார் வள்ளுவர். கடவுளில் எல்லாமே அடங்கியிருக்கின்றன எனும் பேருண்மையை சாஸ்திரங்கள் மூலமாகவும் குருவின் துணை கொண்டும் அறிந்த பிறகு, தனக்கு வேறாக கடவுள் இல்லை எனும் உண்மையை உணருகிறான்!
தன்னை அறிய, தனக்கு ஒரு கேடு இல்லை
தன்னை அறியாமல், தானே கெடுகின்றான்,
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே என்பது திருமூலர் வாக்கு.

கடவுளை நம்புபவனுக்கு, தான் நினைத்தது நடக்காத போது, இறைவனின் இருப்பு குறித்த சந்தேகம் எழுகிறது. பொருளியலை சாராமல் அருளியலுக்கே முக்கியத்துவம் தருபவர்கள் கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவதில்லை.
எறும்பின் காலடி ஓசையையே கேட்கும் ஆற்றல் படைத்த இறைவன், நமது உண்மையான பிரார்த்தனைக்கும் செவி சாய்க்கிறார். ஆனால், பிரார்த்தனை செய்வதெல்லாம் நடந்து விடுகிறதா? தாயானவள், குழந்தை விரும்பியதையெல்லாம் கொடுப்பதில்லை; குழந்தைக்கு எது நல்லதோ அதைத்தானே கொடுக்கிறாள். அதுபோல், அவரவர் செய்த பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லனவற்றைத் தருகிறார் கடவுள்!
'இறைவா! எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒருமுறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நூறு முறை நன்றி கூறுகிறேன்' என்பது உள்ளார்ந்த அர்த்தமுள்ள பிரார்த்தனை.
வேத- இதிகாச, புராணங்களில் அற்புதமான பிரார்த்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன. 'நல்ல எண்ணங்கள், நாலாபக்கத்தில் இருந்தும் நம்மை வந்தடையட்டும்' என்பது ரிக்வேதத்தில் உள்ள பிரார்த்தனைகளில் ஒன்று!
நீண்ட ஆயுள், நோயற்ற உடல் நலம், பொருட் செல்வம், அற வாழ்க்கை, நற்பண்புகள் ஆகியவை கிடைக்க பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. பாரதப் பண்பாட்டில் காலைவிழித்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை, பிரார்த்தனைகள்தான்! பூமியில் கால் வைக்கும் முன்னர் மன்னிப்பு வேண்டி பூமாதேவியிடம் பிரார்த்தனை.... 'ஆயுள், பலம், புகழ், முக ஒளி, நல்ல குழந்தைகள், விளையும் நிலம் ஆகியவற்றையும், கடவுளைப் பற்றிய அறிவையும் கொடு' என்று பல் தேய்க்கும் குச்சியிடமும் பிரார்த்தனை...
'இந்தியாவின் தலைநகர் மும்பை' என தேர்வில் தவறாக எழுதிவிட்டு, ''கடவுளே! இரவோடு இரவாக தலைநகரை மும்பைக்கு மாற்றி விடுங்கள்'' என்று பிரார்த்திக்கும் குழந்தையின் சிறுபிள்ளைத்தனம், வயதானவர்களிடமும் சில நேரம் வெளிப்படும்.
'இறைவா! என்னால் எவற்றை மாற்ற முடியாதோ அவற்றை ஏற்கும் பக்குவமும், மாற்றக் கூடியவற்றை மாற்றும் ஆற்றலும், மாற்றக் கூடியது- மாற்ற முடியாதது குறித்த பகுத்தறிவையும் அருள்வீராக!' என்பது ஓர் பிரார்த்தனை.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே - இது தாயுமானவரின் பிரார்த்தனை.

நாமும்
உயர்ந்த பிரார்த்தனைகள் செய்து உய்வு
பெறுவோம்!

No comments:

Post a Comment

This blog is only for reference & The info., in this blog is posted as received. If you have any clarifications you can contact the sender of the mail/details not the owner fo the blog...

Note : Blog owner is not responsible for the co., / consultancies standard, its subject to the applier's responsibility to enquire & apply for the positions in the co., / consultancies.